லாபம்

திங்கள், 19 ஜனவரி, 2009

சினிமாவை காதலித்த நாட்களில்....03

நான் கவரிமான் பரம்பரையோ இல்லையோ எனக்கு தெரியாது....ஆனால் என்னால் வீட்டுக்கும் ஊருக்கும் இழுக்கு வரக்கூடாது. செத்துமடிந்துவிட வேண்டும்...
இப்படித்தான் இரவு முழுவதும் ஜட்டியோடு கம்பிக்கூண்டுக்குள் நினைவுகள் கழிந்தது.
அதேநேரம், எந்த கவலையுமில்லாமல் டிரைவரும்,சாரதியும் துண்டுபீடிக்காக,எச்சில் துப்பியிருந்த சிமெண்ட் தரையில் தேடிக்கொண்டு இருந்தனர்.
கடவுளே...ஏன் இவர்களோடு பழக்கம் ஏற்படுத்தினாய்? பசியால் வாடினாலும்,நான் நேசித்த இந்த சினிமா கிடைக்காமல் போனாலும்,அவமானங்கள் வராமல் வாழ்ந்தாலே போதுமடா சாமி....
கொசுக்கடியிலும்,வாழ்க்கை பயத்தாலும் வெறித்துப்பார்த்தபடி உட்கார்ந்திருந்த எனக்கு, காக்கை கரையும் சத்தமும் குருவிகளின் கீச்சிடும் சத்தமும் கேட்க தொடங்கியது.
ஆமாம்...விடிந்துகொண்டிருந்தது.......
எனக்கும்தான்....!
எங்கிருந்தோ வந்தான் ஒரு மகராசன். ஜீன்ஸ்பேண்ட்டும்,வெள்ளைநிற ரவுண்ட்நெக் பனியனுமாய் காட்சியளித்தான்.
இந்த டிரைவருக்கு தூரத்து சொந்தம் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.
யாரோ ஒரு புண்ணியவான் பார்த்துவிட்டுபோய்' உன் மச்சான் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறாரு...'என சேதி சொல்லியிருக்கிறார்கள். காலையிலேயே வந்துவிட்டார்.
கடவுள் உண்டா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு சக்தி இருக்கிறது. இல்லையென்றால்..எதுவும் அறியாது சிக்கலில் மாட்டிக்கொண்ட எனக்கு ஒரு விடிவு கிடைக்க வழி நடக்குமா...?
"என்னய்யா,பண்ணினான் இவன்...? இவன் பொண்டாட்டிய..., பெத்தவளே எரிச்சான்னுதான்யா(டிரைவரின் மாமியார்) நாங்க கேஸ் குடுத்திருக்கோம்...,
பொண்டாட்டிய பறிகொடுத்தவன், தான் பெத்த குழந்தையை பார்க்க வரக்கூடாதா..? உடனே கடத்திகிட்டு போகவந்துட்டான்னு அவ உங்ககிட்டே கேஸ் கொடுத்தா.. (டிரைவரின் மாமியார்) நீங்க பணத்த வாங்கிட்டு அவ பக்கமே வாசிப்பீங்களா..?'
'இந்தா பணம்...அவங்கள வெளிய விடுங்க...' என இரண்டு கட்டு நோட்டுகளை போலீஸ்காரங்க டேபிளில் போட்டார் அந்த மகராசன். 
'சார்...ஐயா வரட்டும்...பேசிக்கலாம்..,' என ஒரு போலீஸ்காரன் சொல்ல,
'ஐயாவ நான் பாத்துக்கிறேன்...,முதல்ல இவங்கள வெளியில விடுங்க...'என தைரியமாக பேசி எங்களை விடுவித்ததும் எவ்வளவு நிம்மதியான ஒரு பெருமூச்சுவிட்டுக்கொண்டேன் தெரியுமா...? அந்த நிம்மதி....நான் அனுபவித்த சுதந்திரம்.
வெளியே வந்து கையெடுத்து கும்பிட்டேன். அந்த அறிமுகமில்லாத நண்பருக்கு.
அவர் ஒரு பெண் அமைச்சருக்கு பர்சனல் அசிஸ்டண்ட் என்று சொன்னார்கள்.
அப்படி ஒருத்தர் வராமலிருந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் திசைமாறியிருக்கலாம்.
இன்று வருடங்கள் பல ஓடிவிட்டது.....
ஆனால்,என்னவோ இந்த சம்பவம் மட்டும் இன்னும் மறக்கமுடியாமல்தான் இந்த நெஞ்சுகூட்டில் கிடந்து தவிக்கிறது.... 
மீண்டும் அடுத்து ஒரு சம்பவத்தில்.......
                                                                                     -தொடரும்-


திங்கள், 12 ஜனவரி, 2009

சினிமாவை காதலித்த நாட்களில்....02

லத்தியோடு நின்றிருந்த நான்கு போலீஸ்காரர்கள், நீதான் நவநீதனா? என்று கேட்டபடியே டிரைவரை நோக்கி வேகமாக போனார். லத்தியால் அவரை அடித்து அவரின் காலரை பிடித்து இழுத்தபடியே எங்களை பார்த்து,நீங்கள்லாம் யாருடா? ரவுடியா? எவ்வளவு பணம் கொடுத்தான் உங்களுக்கு ? குழந்தையை தூக்கிட்டுப்போய் என்ன பண்ணலாம்ன்னு திட்டம்போட்டீங்க? பொண்டாட்டிய  மண்ணெண்ண ஊத்தி எரிச்சமாதிரி  குழந்தையையும் எரிக்கப்பாத்தீங்களா?  அந்த போலீஸ்காரர் கேட்க கேட்க என் நெஞ்சுக்குள் பகீர் என  தீப்பற்றி ஒரு நெருப்புபந்து கிளம்பியதுபோல் இருந்தது. உடல் தடதடவென நடுங்க ஆரம்பித்தது.

 இப்படிப்பட்ட நிகழ்வு இந்த உணர்வு எதையும் நான் இதுவரை அனுபவித்ததில்லை. பிடிசி டிரைவருக்கும் அவரின் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டு இருவரும்  பிரிந்து வாழ்ந்ததையோ அந்த பிரச்னையால் அவரது மனைவி தீயில் கருகி இறந்ததை பற்றியோ  எதுவும் தெரியாமல் மொட்டையன் குட்டையில் விழுந்தது மாதிரி மாட்டிக்கொண்டேன்.

என்  மண்டைக்குள்  சரக்சரக்கென பலபல மின்னல் வெட்டுக்கள் பாய்ந்தமாதிரி நிலை தடுமாறி பேந்தபேந்த  விழித்தேன். என் பார்வையை கண்ணீர் மறைத்த்து. 

இனி என் வாழ்க்கை என்னவாகப்போகிறது என நினைக்க நினைக்க ஒரு ஆட்டோவில் எங்களை ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

எங்களை பல போலீஸ்கார்ரகள் அலட்சியமாய் பார்த்தபடி ,இவனுங்கதானா ?’ என முதுகில் ஒரு தட்டுதட்டிவிட்டு போனார்கள் .அதேபோல் வேறுவிஷயமாய் வருவோரும் போவோரும் கேவலமாய் பார்த்துவிட்டு சென்றார்கள். மிகப்பெரிய கொடுஞ்செயலை செய்துவிட்டோம் அல்லது சம்மந்தபட்டுவிட்டோம் என நினைக்கத்தோன்றியது.

வரிசையாக நிற்க வைத்த எங்களை ஒரு போலீஸ்கார லத்தியால்  அடித்தபடி சட்டையையும் பேண்ட்டையும் கழட்டச்சொன்னார். சாரதியும் அவனது நண்பரும் சரசரவென கழற்றினார்கள். எனக்கு கழற்ற முடியவில்லை. மனம் வரவில்லை. அதற்காகவே  மேலும் இரண்டு அடிதான் கிடைத்தது. வேறி வழியில்லாமல் கூனி குறுகியபடி கழற்றினேன்.

ஒரு போலீஸ்காரர் ஒவ்வொருத்தராய் வாயை ஊதச்சொன்னார். என் முறை வந்ததும் நீ என்ன தண்ணி அடிக்கலையா? எனக்கேட்டதும் எனக்காக முந்திக்கொண்டு சாரதி சொன்னான்,'அவர் தண்ணி.. தம் எதும் அடிக்கமாட்டார் சார்... நல்லவர் சார்..!'

'ஓ... நல்லவனா... அப்படின்னா இவனுங்க கூட எதுக்குடா சேர்ந்த..?' என்று மீண்டும் என்னை அடிக்க ஆரம்பித்தார் முகப்பரு போலீஸ்காரர்.  அதற்குள் கழற்றிப்போட்ட  எங்களின் பேண்ட்களையும் சட்டைகளையும செக் பண்ணிய போலீஸ்காரர்,' இது என்னடா.? டைரக்டர் பாக்யராஜ்ன்னு எழுதியிருக்கு?' என ஒரு சீட்டை எடுத்து காட்டிக்கேட்க ,'நான்தான் சார் எழுதினேன்' என அத்தனை வலியிலும் வேதனையிலும் சந்தோஷமாகவும் ,கம்பீரமாகவும் சொன்னேன்.

ஆமாம்...எப்படி தனக்குஒரு காதலியின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி காதலன் சந்தோஷப்படுவானோ, அதேமாதிரி எனக்கு பிடித்த டைரக்டர் பாக்யராஜ்  அவர்களின் பெயரை நான் எழுதிப்பார்த்த சீட்டுதான்அது.

'அவர் பெயரை எதுக்குடா எழுதிவைச்சிருக்க நீ? 'என மிரட்டலாக  போலீஸ்காரர் கேட்க ,'சார் நான் அவருகிட்டேதான் சார் அசிஸ்டண்ட் டைரக்டராக டிரை  பண்ணறேன். சேர்த்துக்கொள்வதா சொல்லியிருக்கிறார் சார்'. என கொஞ்சம் உயிர் வந்த  சந்தோஷத்தில் சொன்னேன். அதுதான் தாமதம் 'ஓ ....சினிமாக்காரனா..? நீங்கதான்  போலீஸ்காரங்களை கேவலப்படுத்தி படமெடுக்கிறதா?'என மீண்டும் எனை அர்ச்சனை செய்ய  துவங்கினார். ஆனால், இந்தமுறை லத்தியின் அடியால் கொஞ்சம் பெருமைப்படதான் முடிந்தது. காரணம் நான் சினிமாக்காரன் என பட்டம் கொடுத்து அடித்ததுதான்.

போட்டிருந்த ஜட்டியோடு லாக்கப்பில் தள்ளி கதவை  சாத்தினார்கள். நேரம் செல்ல செல்ல இருட்டத்தொடங்கியது. எனது மனசும் கூட.....

நான் சினிமா ஆசையால் கனவுதொழிற்சாலையை நோக்கி சென்னைக்கு  வருவதற்குமுன் எனக்கு கிடைத்த வேலை ஒரு தொழிற்சாலையில்தான்.

கடலூரில் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் ஆர்ட்ஸ்  காலேஜில் ஜூவாலஜி மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். (அரியர்ஸ் இருந்தது என்பது வேறு விஷயம்) எனக்காக என் அண்ணன் வேலைக்காக அப்ளிகேஷன் போட்டதில் ஆஸ்வாலிக் கெமிக்கல் பேக்டரியில்(ஓ.டி) இன்டர்வியூ அட்டெண்ட் செய்தேன். மொத்தம் 68பேர் கலந்துகொண்டதில் இரண்டுபேர் செலக்ட் ஆனதாக பிறகு தெரிந்துகொண்டேன். அதில் நானும் ஒருவன்.

அண்ணனுக்கோ அளவற்ற மகிழ்ச்சி. சூப்பர்வைசர் வேலை எனக்கு  கிடைத்திருப்பதாக உணர்த்தினார். எனக்கோ அவர் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. எனது வாழ்க்கை அதுவல்ல. நான் வேறு ஒரு உலகத்திற்கு போகப்போகிறேன் . அது திரைஉலகம்தான் என நினைத்து அன்று இரவே வீட்டில் யாரிடமும்  சொல்லிக்கொள்ளாமல்  ஓடிவந்தவன்தான் நான்.

ஆனால்..இன்று....

 யாரோ ஒருவனுக்காக எந்த உள் விவகாரங்களையும் கேட்டறியாமல் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டிருந்ததால் பொறியில் மாட்டிக்கொண்டேன். இனி சென்ட்ரல் ஜெயிலில் என்னை அடைத்துவிடுவார்கள் . பத்திரிகையில் போட்டோ போட்டு  கொலைகாரர்கள் என்று கொட்டை எழுத்தில் வரும் .

ஊரில் அப்பாவுக்கு இருந்த மரியாதை குறைந்துவிடும். அண்ணனுக்கு என்னால் தலை குனிவு ஏற்படும் . மூன்று அக்காக்களின் கணவர்கள் அக்காக்க்களை பார்த்து  செய்திதாளை காட்டி காறித்துப்புவார்கள்.

 இப்படியெல்லாம் நினைக்க நினைக்க தொண்டையை ஏதோ அடைப்பதுபோல் இருந்தது. கண்ணீர் கொட்டத்தொடங்கியது.

வேண்டாம் இந்த வாழ்க்கை எப்படியாவது செத்துவிடவேண்டும். நான் உயிரோடு இருக்கக்கூடாது...அதற்கு என்ன வழி...என்ன பண்ணவேண்டும்....திடீர் என பொறி தட்டியது....

 

                                                                                         .....தொடரும்....

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சினிமாவை காதலித்த நாட்களில்...01

         இன்னிக்கு எனக்கும் சினிமாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு! ஆனா சினிமாவை காதலித்த நாட்களில் எனக்கேற்பட்ட அனுபவ பகிர்தல்தான் இது.....

லாபம்....!

         ஏன் லாபம் என்ற வலைப்பூவை வைத்துள்ளேன் என்று யாருக்கும் யோசிக்க தோன்றும். ஆமாம்...இந்த லாபம் என்பது எல்லாமும் கிடைத்து கடைசியில் பூஜ்யமாய் முடிந்துபோற வாழ்க்கை பற்றியது.

வியாபாரத்தில் லாபம் நஷ்டம் பார்க்கலாம். ஆனால்,வாழ்க்கையில்......

இனி...,

         என்னோட ஆசை சினிமாதான் என்று நினைத்துக்கொண்டு சென்னைக்கு பயணமித்தேன். சென்னையில் தங்கிய ஆரம்பநாட்களில் எங்கு தங்குவது,யாரை பார்ப்பது, என்ற குழப்பத்தில் நின்ற எனக்கு அனுசரித்து போனது ஒரு டீக்கடை மட்டும்தான். அந்த நாட்களில் எப்படிப்பட்டதாய் எனது வாழ்க்கை இருந்தது என யோசிக்கும்போது, ஒரு நிகழ்ச்சி இப்பவும் பகீர் என்று இருக்கிறது.

வெடிப்போடிய வயல்பரப்பில் நின்று இன்னிக்காவது மழை வராதா..? என்றபடி நெற்றிப்புருவத்தின் ஓரம் கைவைத்து, அன்னாந்து பார்க்கும் கிராமத்து முதியவரைப்போல், இந்த சென்னையில் இன்னிக்காவது ஒரு சினிமாக்காரன்  நட்பு கிடைத்துவிடாதா..?என எதிர்பார்த்தபடி நான்......

         எனக்குதெரிந்த அண்ணாநகர் டீக்கடை பெரிய ஒரு பிசினஸ்சென்டர்.  அங்குதான் எனது சினிமா ஆசையைபற்றி டீக்கடை முதலாளி மூலமாய் தெரிந்துகொண்டு, சாரதி என்பவர் பழக ஆரம்பித்தார். சாரதி ஒரு மிகப்பெரிய இயக்குநரிடம் டச்சப்ஆக இருப்பதாக என்னிடம் சொன்னார். எனக்கோ மிகப்பெரிய சந்தோஷம் .சினிமாவில் சேர்ந்துவிட்டதாகவே மகிழ்ச்சியடைந்தேன்.

           அவருக்காக பணத்தையும் , போட்டிருந்த மோதிரத்தையும்  விற்று செலவுசெய்தேன். காரணம் சாரதியின் பேச்சுத்திறன்தான். எப்படியோ எனக்கு உதவி இயக்குநராக சேர்ந்துவிடவேண்டும் என்பதே குறிக்கோள். இதில் சாரதி சொன்னதிற்கெல்லாம் தலையாட்டுவதும், கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போவதும் (வீட்டிற்கு மண்ணெண்ணய் வாங்கக்கூட...) தொழிலாகவே கொண்டிருந்தேன்.

             ஒருநாள் சாரதி வேறுஒரு நபருடன்என்னிடம் வந்தார். பிடிசி டிரைவர் என்று அவரை அறிமுகப்படுத்தினார். பெற்றகுழந்தையை பார்க்கமுடியாமல் 6மாதமாக பிரிந்து இருப்பதாக கூறினார். இருவரிடத்திலும் தண்ணிவாடை கொஞ்சம்  தூக்கலாகவே இருந்தது.

       இருவரும் ஏதேதோ புலம்பிக்கொண்டிருக்க நான் ஆர்வக்கோளாறாக நடுவில் புகுந்து, இப்போ குழந்தை எங்கே இருக்கு? என்று கேட்டேன்.

மாமியார் வீடு அடையாரில் இருப்பதாக சொன்னார்கள் .(எந்த மாமியார் வீடு என்பது...போகப்போகத்தான் புரிந்தது)

        போய்வர ஆட்டோ  செலவெல்லாம் நான் பார்த்துக்கொள்வதாக சொல்ல,உடனே கிளம்பிப்போனோம். ஆட்டோ அடையாரு சிக்னல் அருகே நின்றது.என்னிடம் 100ரூபாய் வாங்கிக்கொண்டு ஒயின்ஷாப்பிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் வரும்வரை என் நினைவெல்லாம் பிரிந்த குழந்தையும் , தகப்பனும் சேரப்போகும் அந்த காட்சியை  பார்க்கப்போகும் ஆவலில் தத்தளித்துக்கொண்டிருந்தது. இது வளரப்போகும் இயக்குநருக்கு தேவையாகவும் பட்டது.

          ஆட்டோவில் இருந்து இறங்கி குழந்தைக்காக ஒரு மில்க் பிக்கிஸ் வாங்கி வைத்துக்கொண்டேன். ஒயின்ஷாப்பில் இருந்து வெளியே வந்தவர்கள் ஆட்டோவை கட் பண்ணி அனுப்பச்சொல்லிவிட்டு இங்கேதான் இருக்கு வீடு என கையை நீட்டி ஒயின்ஷாப்பிற்கு அருகில் இருந்த மாடியை காட்டினார்கள்.

ஆட்டோ சென்றதும் கடைகளுக்கு இடையே இருந்த சிறிய படிக்கட்டு வழியாக ஏறிபோனார்கள். நானும் பின் தொடர்ந்தேன்.

        மேலே,ஆஸ்பெஸ்டாசும்  தென்னங்கீற்றும் சேர்த்துப்போட்ட குடிசை மாதிரியான ஒரு தாழ்வாரம். அதில், ஒரு வயதான பெண்மணி, ஒரு குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்.அந்த குழந்தையை பார்த்ததும் சாரதியோடு வந்திருந்த பிடிசி டிரைவர் எப்போவ்...வ்..! என்றபடி அருகில் ஓடி தூக்கப்போக, அந்த குழந்தையோ பூச்சாண்டியை பார்த்து பயந்ததுபோல் அந்த அம்மாவை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டது. இவரும் விடுவதாக இல்லை. குழந்தையின் கையைப்பபிடித்து பலவந்தமாக தூக்க,அந்த அம்மா அப்படியே விட்டுவிட்டு வெளியே போய்விட்டார்.(அந்த அம்மாதான் அவருடைய மாமியார் என பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன்) குழந்தை அவரின் பிடியில் அலறியபடி திமிறிகொண்டிருந்த்து.

       இதன் நடுவே சாரதியோ ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு, எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா, அமைச்சரை வைச்சு பேசி தீர்த்திருக்கலாம். என ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க,எனக்கு அதைப்பற்றி சிந்திக்க தெரியவில்லை. தேவையுமில்லை.

       நான் வாங்கிவைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை குழந்தையிடம் கொடுத்தபடி, அழாதே அப்பாதானே....என கெஞ்சினேன். குழந்தை அழகையை நிறுத்துவதாக இல்லை. அதேநேரம் டக்...டக்..என்ற கட்டையின் சத்தமும்,அதைத்தொடர்ந்து பூட்ஸ் காலடி சத்தமும் கேட்க திரும்பிப்பார்த்தேன்.

     நான்கு போலீஸ்காரரகள் லத்தியோடு வர ...அவர்களுக்குப்பின்னால், அந்த வயதான பெண்ணும் பின்தொடர்ந்து வந்து, அதோ நிக்கிறானே அந்தப்பாவிதான் ...ஐயா..! என்று கோபமாக சுட்டிகாட்டியபடி முடியை சுருட்டி ஆவேசமாக கொண்டை போட்டுக்கொண்டிருந்தாள். எனக்கோ எந்த எழவும் புரியவில்லை. என்ன நடக்கிறது....? என்ன நடந்தது.....? என்ன நடக்கப்போகிறது.......? பேயறைந்த முகத்தோடு நான்.........!!!

                                                                                                    தொடரும்........    

சனி, 20 டிசம்பர், 2008

பூ

கள்ளிச்செடியிலும்
கடற்கரை கல்லிலும்
காரை படிந்த சுவற்றிலும்
உன் பெயருடன்
என் பெயரும்...
காலம் கடந்தபின்னும்
காலச்சுவடுகளாய்..!

திங்கள், 15 டிசம்பர், 2008

காதல் கவிதை

உனக்காக
ஒருபடி நெல் விற்று
வாங்கிய ரோஜா செடி
என் வீட்டு வாசலில்..,